விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூ சண்டிகரில் இன்று தொடங்கும் ஒரே ஒரு போட்டி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், அது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அணியின் இளம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில், தனது ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்நூர் பிரார், மனவ் சுதர் ஆகிய 7 வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
தோனி, கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான் கேப்டன்கள் கூட தங்களது ஐபிஎல் அணி வீரர்களுக்கு அதிகபட்சமாக 4 அல்லது 5 இடங்களை மட்டுமே வழங்கியிருந்த நிலையில், இளம் கேப்டன் கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 7 வீரர்களை அள்ளிக் கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 7 வீரர்களில் சுப்மன் கில், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் தேர்வு குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் எழவில்லை என்றாலும், மற்ற வீரர்களின் தேர்வு கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நடப்பு ரஞ்சி கோப்பைத் தொடரில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடி அசாத்திய சாதனை படைத்த ஆல்-ரவுண்டர் ஆகிப் நபி இந்திய அணியில் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்நூர் பிரார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உள்நாட்டுப் போட்டிகளில் சுமாரான ஃபார்மில் இருந்தபோதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்திய அணியில் திணிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ மற்றும் கேப்டன் கில்லுக்கு எதிராகக் கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.
