பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவருக்கு கோரிக்கை விடுத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கச்சத்தீவு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்கு இடைக்கால நிவாரணமாக இலங்கை அரசுடன் கச்சை தீவை பெற 99 வருடங்கள் குத்தகை வாங்க வேண்டும். கச்சத்தீவை மீட்பது மட்டும்தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு. ஐநா கடல்சார் விதிகளை கண்டிப்பாக இலங்கை அரசு கடைபிடிக்க வேண்டும்.

கடந்த 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு கைவிட்டு போவதற்கு காரணம் ‌ ஆட்சி அதிகார பசி கொண்ட அன்றைய திமுக அரசு தான். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை திமுக அரசால் தான் அப்போது ஒன்றிய அரசுகள் இயங்கியது. அப்போதெல்லாம் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இப்போது தனி தீர்மானம் நடத்தி கண்துடைப்பு நாடகம் செய்கிறார்கள்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் போன்ற மற்ற மாநிலங்களில்  மீனவர்களின் நலனில் ஒன்றிய அரசு பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எங்கள் மீனவர்களின் நலனில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதா.? மேலும் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம் என்ற பயணத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

&tbsp;