இன்றைய காலகட்டத்தில் பலர் கல்லூரி வாழ்க்கையின் போது காதலித்து படிப்பை கைவிட்டு பாதியில் திருமணம் செய்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டு தவிக்கிறார்கள். ஆனால் ஒரு காதல் ஜோடி அரசு வேலையில் சேர்ந்து பெற்றோர் சம்மதித்த பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது அதனை நிறைவேற்றி சாதித்துள்ளனர்.

அதாவது தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் கல்லூரியில் படிக்கும்போதே பத்மா என்ற மாணவியை காதலித்தார். அவரை பத்மாவும் காதலித்த நிலையில் இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்து அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக தங்கள் இருவருக்கும் அரசு வேலை கிடைத்தால் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் இருவரும் கடுமையாக படித்தனர்.

அதன்படி பத்மா வேலைவாய்ப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து வந்த நிலையில் நவீன் கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டே படித்து வந்தார். இவர்களின் கடின உழைப்பின் காரணமாக உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை பேராசிரியர்களாக இருவரும் பணியில் சேர்ந்தனர்.

அவர்கள் இருவருக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் நிரந்தரமான அரசு வேலை கிடைத்ததால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தனர். மேலும் இதன் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.