தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை கண்டித்து ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்த போது ஆளுநர் ரவி அங்கிருந்து பாதியிலே வெளியேறி சென்றுள்ளார். தேசிய கீதம் பாடப்படும் முன்பே ஆளுநர் ரவி அங்கிருந்து புறப்பட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து சென்னையில் முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் தி.மு.க வின் எம்.எல்.ஏ க்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிரான பேனர்களை அடிக்க வேண்டாம் எனவும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஆளுநர் விவகாரம் குறித்து திமுக எம்.எல்.ஏ க்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.