பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ணபேதத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு காரல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்தாக தான் இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மனிதர்களை பிறப்பால், சாதியால், நிறத்தால், பாலினத்தால், பணத்தால் பாகுபடுத்தி பார்க்காமல் உரிமைகளை வழங்க வேண்டும் எனும் பறந்த மானுட பார்வை கொண்ட பொதுவுடமை கருத்தியலை வழங்கியவர் காரல் மார்க்ஸ். வேதாளம் முருங்கை மரம் ஏறியதை போல் காரல் மார்க்ஸ் பற்றி தேவையற்ற கருத்தை ஆளுநர் ரவி கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து வர்க்க பேதமற்ற சமத்துவமே திராவிட இயக்கத்தின் இறுதி இலக்கு என்ற லட்சியத்தை மேற்கொண்டவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் எனக் கூறியுள்ள பொன்முடி அவர்கள் வகுத்த சமூக நீதி பாதையைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்தவர் மூத்த தமிழறிஞர் கருணாநிதி என குறிப்பிட்டுள்ளார். மேலும் ராஜ்பவனை காபி ஷாப் போல மாற்றி உலக தலைவர்களையும் தமிழகத்தின் மாண்புகளையும் சிதைப்பதை நிறுத்திவிட்டு அவருக்குரிய வேலையை பார்ப்பதே மக்கள் வரிப்பணத்தில் அவர் பெரும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும் என கூறியுள்ளார்.