
சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்ற நிலையில் திடீரென வாயைப் பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். உடனடியாக அந்தப் பெண் வாலிபரின் கையை கடித்து வைத்துவிட்டு தப்பிஓடிவிட்டார். அந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையில் எப்படியோ தப்பித்த அந்த பெண் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லோகேஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பெருங்குடியில் உள்ள ஒரு பகுதியில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அவர் மது போதையில் தவறு செய்துவிட்டதாக கூறிய நிலையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையில் அவர் திடீரென ஜெயிலில் உள்ள கழிவறையில் வலுக்கி விழுந்ததால் காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.