தமிழகத்தில் ஆலய வருவாய் நிதியை கல்வி நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, அதிமுக RSS, பாஜக-வின் கட்டுப்பாட்டிலுள்ள கட்சி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி யார் மீதான லாயல்டியோ தெரியாது. ஆனால், அவரது மனது முழுக்க முழுக்க பாஜக மற்றும் RSS பக்கம் இருக்கும் என்பதுதான் எங்களுக்கு நிச்சயம். கட்சியை விட்டுவிட்டார் போலிருக்கிறது”. “ஆலய நிதிகளை கொண்டு கல்வி நிறுவனங்கள் கட்டலாமா? என்று கேள்வி எழுப்புகிறார். அந்த பணியை தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர்தான் இந்த வழியைத் திறந்தார்.

இப்போது அந்த நல்ல பணியை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு மிகச் சிறப்பாக செய்து வருகிறார். 2021-க்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழக அரசு வந்தபின், சுமார் ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஆலய சொத்துக்களை மீட்டெடுத்துள்ளது,” எனவும் தெரிவித்தார்.

மேலும், “அதிமுக ஆட்சியில் இதுபோன்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? எதற்காக 10 ஆண்டுகளாக ஆலய சொத்துகளை அப்படியே வாடிய நிலையில் விட்டனர்? இந்த அரசு அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நேர்மையாக செய்துவருகிறது. இறைவன் மக்களுக்காக இருக்க வேண்டும். அந்த சொத்துக்களும் அடுத்த தலைமுறை மக்களுக்காகவே இருக்க வேண்டும். அப்படியிருக்க, கல்வி நிறுவனங்களைத் துவங்குவதில் என்ன தவறு?” என வினவினார்.

இவ்வாறு கூறிய அவர், “எடப்பாடி பழனிசாமி தற்போதைய அரசியல் நிலையைப் புரியாமல், பாஜக அல்லது RSS கொடுக்கும் எழுத்துப்பத்திரங்களைப் படித்து கேள்விகள் எழுப்புகிறார். RSS சொல்லும் வார்த்தையை நம்பிக்கையோடு பின்பற்றுகிறார். திராவிட கட்சி என்று அழைக்கப்படும் அதிமுக, இப்போது முழுமையாக சங்கிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கட்சி ஆகி விட்டது. திராவிடமையைக் கேள்விக்குள்ளாக்கும் இதுபோன்ற நிலைப்பாடுகள் வரலாற்றுக்கு எதிரானவை,” என சாடியுள்ளார்.