தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொது குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜகவை நேரடியாகவே விமர்சித்தது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவை நடிகர் விஜய் ஒரு இடத்தில் கூட விமர்சிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆரம்பம் முதலே அதிமுகவை நடிகர் விஜய் விமர்சிக்காத நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு துவக்க விழா கூட்டத்தின் போது தமிழக வெற்றி கழகம் தான் தேர்தல் வரும் வரையில் எதிர்க்கட்சி என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
இதன் காரணமாக அதிமுகவை போட்டிக்கு அவர் எடுத்துக் கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை என்ற உறுதிப்படுத்தும் விதமாக அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே மட்டும்தான் போட்டி என்றும் தமிழக அரசியல் இனி புதுவிதமான தேர்தலை சந்திக்கும் என்றும் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் தான் போட்டி எனவும் விஜய் சூளுரைத்தார்.
அதோடு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே பெயரை மட்டும் கம்பீரமாக சொன்னால் போதாது அதை செயலிலும் காட்ட வேண்டும் என்றார். அதன் பிறகு பிரதமர் மோடிக்கு தமிழர்களை பார்த்தாலே அலர்ஜி என்றும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முற்றிலுமாக மத்திய பாஜக அரசு புறக்கணித்துவிட்டது என்றும் கூறினார்.
மேலும் அதிமுகவின் இடத்திற்கு குறி வைத்து தான் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே போட்டி என்று விஜய் கூறினாரா அல்லது எடப்பாடிபழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் அவர்களை பெரிய அளவில் விஜய் கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
