
பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தினர் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்குப் பிறகு, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டது.
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இதில், பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும்.
இந்த தாக்குதலில் மசூத் அசாரின் மூத்த சகோதரி, மைத்துனர், நான்கு குழந்தைகள் மற்றும் அவரது நெருங்கிய நான்கு உதவியாளர்கள் உயிரிழந்தனர். இந்த தகவலை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பே உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படை (IAF) பயன்படுத்திய சிறப்பு துல்லிய வெடிமருந்துகள் மூலம் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ அமைப்புகள் அல்லது பொதுமக்கள் அல்லாது, நேரடியாக பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் தரப்புகள் தெரிவித்துள்ளன.