இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்வதும், தொலைக்காட்சி மற்றும் செல்போன்களைப் பயன்படுத்துவதும் இயல்பாகிவிட்டது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் எழாமல் உட்கார்ந்திருப்பது புற்றுநோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கும் எனப் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 91,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் சுமார் 12 ஆண்டுகள் ஆய்வு நடத்தி இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாள் முழுவதும் ஒரே இடத்தில் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருப்பவர்களுக்குப் புற்றுநோய் இறப்பு அபாயம் அதிகமாக உள்ளது. மேலும், தொடர்ந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்த அபாயம் 9 முதல் 10 சதவீதம் வரை உயர்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

அமர்ந்து வேலை செய்வோருக்கு இந்த ஆய்வில் ஒரு நல்ல செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. ஒரே அடியாக உட்கார்ந்திருக்காமல், இடையில் எழுந்து சிறிது நேரம் நடப்பது அல்லது வீட்டு வேலைகளைச் செய்வது புற்றுநோய் அபாயத்தை 12 சதவீதம் வரை குறைக்கிறது. அதேபோல, 30 நிமிடங்கள் வேகமாக நடப்பதும், வெறும் 5 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த ஆபத்தை பெருமளவில் குறைக்க உதவுகிறது.

ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்திருக்கும் போது தசைகளின் இயக்கம் குறைந்து, ரத்த சர்க்கரை அளவு மாறுபடுகிறது; இதனால் உடலில் அழற்சி அதிகரித்து நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது நேரடியாகவே புற்றுநோயை உண்டாக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றாலும், அதற்கான வாய்ப்புகளை நிச்சயமாக அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

எனவே, ஜிம்மிற்குச் சென்று தினமும் கடினமாக உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சில நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிறிய அளவிலான உடலியக்க மாற்றங்களும் கூட புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும்.