பல் பாதுகாப்புக்கு மிக அவசியமான பற்பசையை (Toothpaste), பெரும்பாலானோர் விளம்பரங்களில் வருவதுபோல அதிக அளவில் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் எனப் பல் மருத்துவர் மைல்ஸ் மேடிசன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) நடத்திய ஆய்வில், 40% மக்கள் தேவைக்கு அதிகமாகப் பற்பசையைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், பல் துலக்கத் தேவைப்படும் பற்பசையின் அளவு வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பல் முளைத்த நாளில் இருந்து, அவர்கள் துப்பக் கற்றுக்கொள்ளும் வரை, வெறும் ஒரு அரிசி மணி அளவோ அல்லது மெல்லிய பூசுதல் (Smear) அளவோ பற்பசை போதுமானது. அதேசமயம், 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஒரு பட்டாணி அளவு பற்பசையைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் மேடிசன் பரிந்துரைத்துள்ளார்.
தேவையான அளவைவிட அதிகப் பற்பசையைப் பயன்படுத்துவது சில நீண்டகால மற்றும் குறுகிய காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக ஃப்ளூரைடு வெளிப்பாடு காரணமாக, குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பற்களில் வெள்ளை நிறப் புள்ளிகள் அல்லது கோடுகள் உருவாகும் ‘டென்டல் ஃப்ளோரோசிஸ்’ என்ற பாதிப்பு ஏற்படலாம்.
மேலும், அதிகப்படியான பற்பசையை விழுங்குவது வயிற்று எரிச்சல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளையும், அதிகப்படியான தேய்ப்பினால் பற்சிப்பிகள் தேய்மானம் மற்றும் ஈறு எரிச்சல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். நுரை அதிகமாகப் பொங்குவதாலும், அசௌகரியம் ஏற்படுவதாலும் பல் துலக்குதலை விரைவில் நிறுத்திவிடுவது சரியான சுத்தம் செய்யாமைக்கு வழிவகுக்கும்.
எனவே, பற்பசையை விழுங்காமல், சரியான அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும், பெரியவர்களும் பட்டாணி அளவுக்கே உபயோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
