சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் பகுதியில் வசிக்கும் இளைஞர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர்கள் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்கள். இதனை நம்பி அவர்கள் கூறிய இரண்டு வங்கி கணக்குகளுக்கு 18 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தினேன். ஆனால் அந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பணத்தை திரும்பத் தரவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த பிரவீன் குமார், ராஜு, அசோக் குமார், பிரவீன், வீரராகவன் ஆகிய 5 பேரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மோசடி செய்த பணத்தை மலேசியாவில் இருக்கும் கூட்டாளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டது. இவர்கள் மீது மோசடி தொடர்பாக ஏற்கனவே 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.