இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசால் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்பட்டு மக்கள் ஐடி வழங்கப்பட இருக்கிறது. இந்த மக்கள் ஐடி  ஆதார் அட்டைக்கு போட்டியாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்று பல்வேறு தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் ஐடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் வசிக்கும் அனைவரின் தரவுகளையும் ஒருங்கிணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு குடும்பங்களின் தரவுகளையும் சேமிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முடிவு செய்துள்ளது. இதில் மாநில மக்களின் அனைத்து தரவுகளும் சேமிக்கப்படும். இந்த மக்கள் ஐடி அட்டை 10 முதல் 12 இலக்க எண்களை கொண்டிருப்பதோடு, ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாள அட்டையாகவும் விளங்கும். அதன் பிறகு தமிழக அரசின் மக்கள் ஐடி என்பது யாருக்கும் போட்டியோ, பொறாமையோ கிடையாது. ஆதாருக்கு போட்டி என்றெல்லாம் தகவல் வருகிறது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. திட்டங்கள் பயனாளிக்கு சரியான முறையில் கிடைப்பது அவசியம் என்பதால், குடும்ப தரவு தளம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.