சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது உரிமையாளருக்கு பதிவு செய்யப்பட சான்றுக்காக பிரதி ஆவணம் வழங்கப்படும். ஆனால் உரிமையாளர்களுக்கு அசல் ஆவணம் சில நாட்களுக்கு பிறகு தான் கிடைக்கும். இந்த பிரதி ஆவணத்தை உரிமையாளர் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற முடியும். அவ்வாறு பெறும் போது அதில் உள்ள உரிமையாளரின் ஆதார் விவரங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதே சமயம் உரிமையாளர்கள் தங்களுடைய பிரதி ஆவணங்களை யார் யார் பெற்றார்கள் என்பதை அறிய முடியாத நிலையும் ஏற்படுகின்றது.

இந்த நிலையில் பத்திரப்பதிவின்போது எவ்வாறு உரிமையாளர்களின் ஆதார் எண் பதிவு செய்யப்படுகின்றதோ அதனைப் போலவே பிரதி ஆவணங்கள் வழங்கப்படும் போதும் பெறுபவரின் ஆதார் எண் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சார் பதிவாளர் சரி பார்க்கும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உரிமையாளரின் ஆதார் எண்ணை பாதுகாப்பதற்கு சொத்து பத்திரங்களில் ஆதார் எண்ணை மாஸ்க்கிங்  முறையில் மறைப்பதற்காக பத்திரப்பதிவுக்கான ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் சில தொழில்நுட்ப  மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.