
இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தேசியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை விடுவிப்போம் என்று கூறியுள்ளார். ஆனால் இருமொழிக் கொள்கை மட்டும் தான் தமிழ்நாட்டில் என்றென்றும் பின்பற்றப்படும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் மும்மொழிக்கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதி கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் உடனடியாக கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் பாஜக மற்றும் திமுகவினர் இடையே கருத்து மோதல் என்பது ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கோவி செழியன் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததற்காக கல்விக்கான நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அதாவது சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் ஒன்றிய அரசை எதிர்க்கும் ஆண்மை உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று ஆண்மையை வீரம் போன்று உயர்த்தி அவர் பேசினார்.
உடனடியாக அவரை அங்கிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர் அமைச்சர் தன் வார்த்தையில் கூறிய ஆண்மை என்கிற வார்த்தையை நான் திருத்த விரும்புகிறேன். ஆண்களுக்கு நிகராக பெண்களும் இங்கே இருக்கிறார்கள். ஆண்மை என்றால் வீரம் என்றெல்லாம் கிடையாது. ஆணுக்கு பெண் இங்கு சரிசமம் என்பதை நான் குறிப்பிடுகிறேன் என்று கூறினார். மேலும் ஆண்மை என்பதை வீரம் போன்று பேசிய அமைச்சரை உடனடியாக மேடையில் வைத்தே தடுத்து நிறுத்தி துணை முதல்வர் உதயநிதி ஆணும் பெண்ணும் சமம் என்று கூறியது வரவேற்பை பெற்றுள்ளது.