பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் ,பள்ளி கல்லூரிகள் ,பயிற்சி நிறுவனங்களும் தண்ணீர் பற்றாக்குறையால் வீட்டில் இருந்தே ஊழியர்களை பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது .குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிலையங்களில் தனியார் டேங்கர் லாரிகளுக்கு மாறி மாறி போன் செய்து தண்ணீருக்கு ஆர்டர் செய்து வருகிறார்கள் .

தற்போதைய சூழலில் ஆர்டர் செய்தால் ஒரு வாரம் கழித்து தான் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இதை தீர்க்க என்னதான் வழி என்று கேள்வி அனைவருடைய மனதிலும் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு தீர்வு காணும்  விதமாக கூடுதல் நீர் ஆதாரங்களை தேடி மாநகராட்சி நிர்வாகம் அலைந்து கொண்டிருக்கிறது .கிடைக்கும் தண்ணீரை பால் வண்டி மூலமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது .பாதுகாப்பு, ரயில்வே உள்ளிட்ட துறையில் 10 முதல் 20 சதவீதம் வரை குடிநீர் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து மிச்சப்படுத்தப்பட்டு வரும்  நீரை குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கட்டுப்பாட்டு அறைகளும், அவசர எண்களும் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.