தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் “ஆட்சியில் பங்கு வேண்டும்” என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலுவாக முன்வைத்து வருகின்றனர். இது திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இன்று (பிப்.17) செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது குறித்துத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

​”ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸின் உரிமை; அதைக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை” என்று கூறிய அவர், இந்தக் கோரிக்கையால் திமுக கூட்டணி உடையும் என்று கணக்கு போடுபவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். “கூட்டணிக்குள் சில கோரிக்கைகள் வருவது சகஜம், அவை பேசித் தீர்க்கப்படும். இந்தக் கருத்தால் கூட்டணி சிதையும் எனச் சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது ஒருபோதும் நடக்காது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். திருமாவளவனின் இந்த விளக்கம், தற்போது திமுக கூட்டணிக்குள் நிலவும் சலசலப்பைச் சற்று தணிக்கச் செய்துள்ளது.