சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன் மகனுடன் வசித்து வந்த நிலையில் தினசரி ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வார்.

அந்த வகையில் இவர் நேற்று கால்நடைகளை மேய்ச்சலுக்காக வழக்கம் போல் அழைத்து சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அப்போது அவருடைய காது மற்றும் மூக்கு ஆகிய உறுப்புகள் நகையோடு சேர்த்து அறுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் மூக்குத்தி மற்றும் கம்மல் என சுமார் ஒரு பவுன் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் நகைக்காக அவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் சரஸ்வதி ஆடைகள் கலைந்து கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதால் அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வரும். மேலும் இந்த சம்பவம் இன்ந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.