சென்னை சூளைமேடு பத்மநாப நகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (30) என்ற மெடிக்கல் ரெப் இளைஞர், தனது வீட்டின் கீழ் தளத்தில் குடிவந்த கேரளாவைச் சேர்ந்த நமீதா (21) என்ற பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனைத் தனது கைபேசியில் நமீதா பதிவு செய்துகொண்ட நிலையில், பின்னர் சுதர்சனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வைத்து அனுப்பியுள்ளார்.

​இதன் தொடர்ச்சியாக, சுதர்சனை வாட்ஸ்ஆப் மூலம் தனியாக ஒரு பகுதிக்கு வரவழைத்த நமீதா, அங்குத் தயார் நிலையில் இருந்த உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மோனிஷா மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சுதர்சனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து, நமீதாவிற்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், தராவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்துச் சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

​பணம் தர அவகாசம் கோரிய சுதர்சனை மீண்டும் அழைத்து, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து அவரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியும், இடது காலில் சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இறுதியாக ரூ.2 லட்சமாவது தர வேண்டும் என மிரட்டி அனுப்பவே, சுதர்சன் தனது மனைவியின் ஒப்புதலோடு சூளைமேடு காவல் நிலையத்தில் தைரியமாகப் புகார் அளித்துள்ளார்.

​இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மணி நகுலன் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில், பெண் வழக்கறிஞர் மோனிஷா, கேரளப் பெண்கள் நமீதா, சிவரஞ்சனி மற்றும் அவர்களின் நண்பர்களான பாலகிருஷ்ணன், கணேஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து பணத்திற்காக இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.