ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக நாசிக் லசல்காவ் ஏபிஎம்சி மார்க்கெட் இருக்கிறது. இந்த சந்தையில் வெங்காயம் ஏலம் விடப்பட்டது. அப்போது ஒரு கிலோ வெங்காயம் கிலோவுக்கு ரூ. 1, ரூ. 2, ரூ. 3 ஆகிய விலைகளில் ஏலம் போனதால் விவசாயிகள் ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்காய உற்பத்தியாளர் சங்க தலைவர் பாரத் திகாலே தற்போது நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒரு குவிண்டால் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து 1500 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடுவதோடு, ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தர வேண்டும் என்று கூறினார்.

இல்லையெனில் நாசிக் மார்க்கெட்டில் வெங்காயம் ஏலம் விடப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார். மேலும் மராட்டிய மாநில வெங்காய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தற்போது வெங்காய ஏலத்தை நிறுத்தியதால் மார்க்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.