மும்பை நகரில் உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வைல் பார்லே பகுதியில் இரு வாகன ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மிகுந்த கோபமாக மாறியது. அதில் ஒருவரான எர்டிகா கார் ஓட்டுநர், எதிரே நின்றிருந்த நபரை நசுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நபர் தன்னைக் காப்பாற்ற, வேகமாக வந்த காரின் பானட்டில் ஏறிய நிலையில், டிரைவர் காரை மேலும் வேகமாக ஓட்டியுள்ளார்.

பழிவாங்கும் மனநிலையில் இருந்த டிரைவர், பானட்டில் தொங்கிய நபர் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருக்கின்றார் என்பதை பொருட்படுத்தாமல், காரின் வேகத்தைக் குறைக்காமல் அதனை மேலும் அதிகரித்துள்ளார். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிய அந்த நபர், பானட்டில் நிலைபேறாக பிடித்துக் கொண்டு தன்னை காப்பாற்ற முயற்சி செய்தார். இந்த பரிதாபகரமான காட்சியை அருகில் சென்ற பைக் ஓட்டுநர் ஒருவர் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்துள்ளார். அதில், காரின் வேகமும், பானட்டில் தொங்கும் நபரின் உயிர்ப்போராட்டமும் தெளிவாக காணப்படுகிறது.

 

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலைய காவல் நிலையம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எர்டிகா கார் ஓட்டுநர் பீம்குமார் மஹதோ மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்கும், மனித உயிருக்கு ஆபத்து விளைவித்ததற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த  சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.