உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில், குடும்ப உறவுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து சுமார் 1,000 கி.மீ. பயணம் செய்து வந்த 45 வயதான கோவிந்த் நிஷாத், தனது மனைவியின் சகோதரரின் மனைவியை சந்திக்க இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 11-ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் அவர் அந்த வீட்டுக்குச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் இருந்தவர்களுக்கு இரவு நேரத்தில் அறைக்குள் இருந்து மெதுவான குரலில் பேசும் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த பெட்டியைத் திறந்தபோது, அதற்குள் கோவிந்த் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை வெளியே அழைத்து வந்த குடும்பத்தினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிந்துக்கு சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், அவர் சந்திக்கச் சென்றதாக கூறப்படும் சாவித்திரிக்கு சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் ராம்கேஷ் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் உயிரிழந்த பிறகு கோவிந்துக்கும் சாவித்திரிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கோவிந்த் நீண்ட காலமாக சாவித்திரியுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இரவு நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.