பணக்கார வீட்டு வாரிசுகளின் அதிவேக கார் மோகத்திற்கும், சாலையில் மற்ற உயிர்களைத் துச்சமாக நினைக்கும் அராஜகப் போக்கிற்கும் மீண்டும் ஒரு ஏழைத் தொழிலாளி பலியாகியிருக்கும் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் மும்பை நகரில் அரங்கேறியுள்ளது.

தன் குடும்பத்தின் பசியைப் போக்கவும், அன்றாடப் பிழைப்பிற்காகவும் இரவென்றும் பகலென்றும் பாராமல் உணவு டெலிவரி செய்து வந்த இளம் தொழிலாளி ஒருவர், வழக்கம்போலத் தனது இருசக்கர வாகனத்தில் டெலிவரி செய்யச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கோடீஸ்வரரின் வாரிசு ஓட்டி வந்த சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் ஒன்று, சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து அந்த இளைஞரின் வாகனத்தின் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த பிற வாகனங்களை முந்திச் செல்ல வேண்டும் என்ற ஓவர்டேக் வெறியிலும், எல்லை மீறிய வேகத்திலும் இயக்கப்பட்ட அந்த சொகுசு கார், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வேகத்தில், டெலிவரி பாய் பல அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இளைஞரின் உடல் பாகங்கள் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் தனது உயிரை இழந்தார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அரங்கேறிய இந்த கோர விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரும் மற்ற வாகன ஓட்டிகளும், உடனடியாக காரை ஓட்டி வந்த நபரையும் வாகனத்தையும் சுற்றி வளைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், காரை ஓட்டி வந்த கோடீஸ்வர வீட்டு இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன் குடும்பத்தினருக்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து, வியர்வை சிந்தி உழைத்த ஒரு ஏழை இளைஞனின் வாழ்க்கை, பணக்காரர்களின் வேக மோகத்தால் ஒரே விநாடியில் பறிபோயிருப்பதை அறிந்து அவரது குடும்பத்தினர் கதறி அழுது துடிப்பது காண்போரின் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.

இதுபோன்ற பணக்கார வீட்டு வாரிசுகளின் அராஜக ஓட்டத்திற்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கொதித்தெழுந்து வலியுறுத்தி வருகின்றனர்.