ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டநிலை தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை அணி நிலையான தொடக்கத்தையும், தாக்கத்தையும் காணவில்லை.

டெல்லி அணி முதலில் பேட் செய்து 183 ரன்கள் எடுத்த நிலையில், சென்னை அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர்கள் ரச்சின், கான்வே, கெய்க்வாட் ஆகியோர் மிகக் குறைந்த ரன்களில் வெளியேறியதால்  அணி பெரும் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். முக்கியமாக ரன் ரேட் உயர்ந்த நேரத்தில் தோனி – விஜய் சங்கர் ஜோடி சிங்கிள்களுக்கு மட்டும் செல்லும் பேட்டிங்கைத் தேர்வு செய்ததாலேயே ஆட்டத்தின் போக்கை மாறவைக்க முடியவில்லை என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

சில சிக்சர்களும் பவுண்டரிகளும் வந்திருந்தாலும், அவை வெற்றிக்குத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது சிஎஸ்கே அணி பிளேஆஃப் சுற்றுக்கே தகுதி பெறுமா என்பதுபோல் சந்தேகங்கள் எழுந்துள்ளன.