பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமி, இந்தியாவில் வாழ விரும்பி எல்லையை கடந்து நுழைந்துள்ளனர். ஆனால், அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒரு சோகமயமான முடிவுக்கு வந்துள்ளது. தார் பாலைவனத்தின் கடுமையான வெப்ப நிலை மற்றும் நீரிழப்பு காரணமாக இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, ஜூன் 28-ம் தேதி சனிக்கிழமை டானோட் பகுதியில், இரண்டு இளைஞர்களின் சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சிறுவன் மரத்தின் கீழ் சாவார் குர்தா அணிந்த நிலையில் கிடந்தார். அருகில் வெறும் ஜெர்ரி கேன் மற்றும் ஒரு மொபைல் போனும், மஞ்சள் துப்பட்டாவும் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல், சிறுவனிடமிருந்து சுமார் 50 அடி தொலைவில் காணப்பட்டது. அவர் மஞ்சள் நிற காக்ரா, சிவப்பு மற்றும் வெள்ளை வளையல்கள் அணிந்திருந்ததாகவும், இருவரின் முகமும் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்திருந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

துப்பறியும் நடவடிக்கைகளில், போலீசார் கண்டெடுத்த பாகிஸ்தானிய அடையாள அட்டைகள் மூலம் இருவரின் தேசியம் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், விசா நிராகரிக்கப்பட்டதால், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது. இந்த தம்பதியர் இந்தியாவில் வாழ விரும்பி, விசாவிற்காக ஒன்றரை ஆண்டுகளாக முயற்சி செய்தும் முடியாததால், இந்த தவறான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சீமந்த் லோக் சங்கதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீப் சிங் சோதா கூறியதாவது, சிறுவன் புனித யாத்திரை விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டதால், தனது காதலியுடன் சேர்ந்து இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டதாகவும், அவர்கள் நம்பிக்கையுடன் தொடங்கிய பயணம், தண்ணீர் இல்லாததால் மரணமாக முடிந்தது என்றும் தெரிவித்தார்.

ஜெய்சால்மர் வட்ட அதிகாரி ரூப் சிங் இந்தா கூறியதாவது, விசா விவரங்கள் தொடர்பான தகவல்களை உள்ளூர் வெளிநாட்டு பதிவு அலுவலகத்திடம் போலீசார் கேட்டுள்ளனர். இரண்டு உடல்களும் இந்துமதச் சடங்குகளின்படி தகனம் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு மீதும், பாகிஸ்தானிய சிறுபான்மைகள் எதிர்கொள்ளும் வேதனைகளையும் வெளிக்கொணர்கிறது. சட்டவிரோத நுழைவு எவ்வளவு பேரிழப்புகளுக்கு வழிவகுக்கலாம் என்பதற்கான ஒரு வருத்தமான எடுத்துக்காட்டாகவும் இது அமைந்துள்ளது. மேலும் இந்த சோக நிகழ்வை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.