
விருதுநகர் மாவட்டம் மடத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா(41). இவரது மனைவி மகேஸ்வரி(36). இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை மகேஸ்வரி வீட்டிற்கு பின்புறம் உள்ள விவசாய கிணற்று படிக்கட்டில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்த மகேஸ்வரி ஒரு கல் திட்டை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ராஜாவும், மகேஸ்வரியின் தாய் ராஜம்மாளும்(57) ஓடி சென்றனர். மனைவியை காப்பாற்றுவதற்காக ராஜா தண்ணீரில் குதித்து தத்தளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜம்மாள் மருமகனை காப்பாற்ற கிணற்றில் குதித்தார் இதனால் ராஜாவும் ராஜம்மாளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகேஸ்வரியை மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராஜம்மாள், ராஜாவின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.