தனது அறிமுக டி20 போட்டியிலேயே 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ள பிரசித் கிருஷ்ணாவை ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.. 

இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. பும்ரா தலைமையில் இளம்படை சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் புதிதாக அறிமுகமானார்கள். இதில் டாஸ் வென்ற பும்ரா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் அயர்லாந்து அணி களமிறங்கி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. பின் இந்திய அணி களமிறங்கி 6.5 ஓவரில் 47/2 என இருந்தபோது மழை வர போட்டி நிறுத்தப்பட்டது. எனவே மழை காரணமாக இந்திய அணி டக் வொர்த் லூயிஸ் முறையில் 2 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேக நட்சத்திரம் பிரசித் கிருஷ்ணா சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டார். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் நுழைந்துள்ள இந்த கர்நாடக வேகப்பந்து வீச்சாளர், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 மூலம் குறுகிய கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் கவர்ந்தார். இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசினார். அவர் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிரசித் தனது முதல் ஓவரிலேயே டெக்டரை ஆட்டமிழக்கச் செய்தார், 2வது ஓவரில் டாக்ரெலை பெவிலியனுக்கு அனுப்பினார். இந்த போட்டியில் பும்ராவும் 24/2 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கிருஷ்ணா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலமாக அணியில் இருந்து விலகி இருந்தார். காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரையும் தவறவிட்டார். இந்தப் போட்டிக்காக தேசிய அணியில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் விலகி இருந்தார்.

காயத்தில் இருந்து மீண்ட உடனேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணாவுக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, சிராஜ் மற்றும் ஷமியை தேர்வு செய்ய பலர் பரிந்துரைத்து வருகின்றனர். அதே சமயம் 27 வயதான பிரசித் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்காக இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள கிருஷ்ணா, 5.32 என்ற எக்கனாமியுடன் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே பிரசித் கிருஷ்ணாவையும் அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் தற்போது குதிகால் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற சிராஜ், அங்கிருந்து நாடு திரும்பினார். அவரது உடற்தகுதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. ஒருவேளை சிராஜ் ஆடாத பட்சத்தில் மாற்றாக  பிரசித் கிருஷ்ணாவை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சிராஜ் மீண்டு அணியில் இடம்பிடிப்பார் என்றே கூறப்படுகிறது.