உக்ரைனின் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதால் உலகளாவிய ஏற்றுமதி தடைப்பட்டு கோதுமையின் விலை 10% உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு அரிசி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இது அரிசியின் விலையையும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது. எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.

இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி தடையால் அரிசியின் விலை உலக அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரிசி வர்த்தகர்கள் இதன் மூலம் அதிக லாபம் பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 300 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி தான் முக்கிய உணவாகும். 90% அரிசி உற்பத்தி ஆசியாவில் தான் நடக்கிறது. மேலும் உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் 40% இந்தியா பங்கு வகிக்கிறது.