டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவிற்கும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும், மந்திரிகளும் கடந்த 16-ஆம் தேதி பேரணி சென்றுள்ளனர். ஆனால் அவர்களை கவர்னர் அப்போது சந்திக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கவர்னர் தனக்கு தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்வதாக சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அதனை கவர்னர் மறுத்துள்ளார். வெள்ளிக்கிழமை தோறும் முதல் மந்திரி கவர்னரை சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த மோதல் காரணமாக சில வாரங்களாக இந்த சந்திப்பு நடைபெறவில்லை. இந்நிலையில் கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று அரவிந்த்  கெஜ்ரிவாலுக்கு திடீரென அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அழைப்பை ஏற்கவில்லை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “கவர்னரின் அழைப்புக்கு நன்றி. ஆனால் நான் வெள்ளிக்கிழமை பஞ்சாப் செல்கிறேன். அங்கு 400 மக்கள் மருத்துவமனைகளை திறந்து வைக்க இருக்கின்றேன். அதனால் வேறு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கவர்னர் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.