திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூரில் இருந்து அரசு பேருந்து கரூர் பள்ளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 13 பயணிகள் இருந்தனர். பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பிரபாகரன் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் ரங்கநாதபுரம் நிறுத்தத்தில் பயணியை இறக்குவதற்காக பேருந்து நின்றது. அப்போது மதுரையில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்ற சரக்கு லாரி பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.

மேலும் பேருந்து குமாரராஜன் என்பவரது வீட்டு மேற்கூரையை சேதபடுத்தியது. இதே போல் மோதிய வேகத்தில் சரக்கு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காந்தி, பாப்பாத்தி, பழனியம்மாள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.