தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்த போதிலும் அதனை மீறி போராட்டம் நடத்துகிறார்கள். அதாவது அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு கோரிக்கைகளையும் பட்ஜெட்டில் அறிவிக்காததால் அதிருப்தியில் போராட்டம் நடத்துகிறார்கள்‌. இந்நிலையில்அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தும் போராட்டம் என்பது தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சகணக்கான குடும்பங்களின் நலன் சார்ந்த வாழ்வாதாரப் போராட்டமாகும். எனவே லட்சக்கணக்கான குடும்பங்களின் நலனை மனதில் வைத்து இந்த போராட்டத்தை மனிதாபிமான முறையில் மட்டுமே அணுக வேண்டும்.

திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் தற்போது அதனை ஏமாற்றி விட்டது. அனைத்து மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திராவிட மாடல் அரசு  திகழ்கிறது என்று மார்தட்டும் இந்த திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்.

இந்தியாவில் ஏற்கனவே ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர்,பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அதனை செயல்படுத்த முடியவில்லை. மேலும் திமுக அரசின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாக போராடும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார்.