மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண் நடனக் கலைஞர்களைக் கொண்டு ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாடியா மாவட்டம் பராசரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளி வளாகத்திற்குள் பெண் நடனக் கலைஞர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதும், அங்கிருந்தவர்கள் உற்சாக மிகுதியில் பணத்தை வாரி இறைப்பதும் பதிவாகியுள்ளது. கல்வி கற்கும் இடத்தில் இத்தகைய தரம் தாழ்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளி முதல்வர் பல்வான் சிங் கூறுகையில், “உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பஞ்சாயத்து செயலாளர் ரிங்கு யாதவ் மற்றும் சர்பஞ்ச் நீலம் பரிஹார் ஆகியோர் இதற்கு ஒப்புதல் அளித்தனர். பள்ளி நேரத்திற்குப் பிறகு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சி இது” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு அரசுப் பள்ளி வளாகத்தை, இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி நேரத்திற்குப் பிறகு நடந்தாலும், கல்வி நிறுவனத்தின் புனிதத்தன்மை கெடுக்கப்பட்டுள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Gwalior News Live (@gwaliornewslive)

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி (DPC) ராஜேஷ் சுக்லா கூறுகையில், “இந்த வீடியோ எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி முதல்வரிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் கோரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியும் விதிகளுக்கு உட்பட்டே நடக்க வேண்டும். இதற்கு யார் அனுமதி வழங்கியது? விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

விசாரணையில் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கல்வி நிலையங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த இந்த விவாதம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.