
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி துரை வைகோ, அரசியலைப் பொறுத்தவரை விபத்தின் மூலமாக நான் அரசியலுக்கு வந்தவன் இல்லை. அரசியலில் நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கு அரசியல் அனுபவம் எதுவும் அதிகமாக கிடையாது. அரசியல் வர்த்தகத்தினரை எதிர்த்தவன் நான். கால சூழ்நிலையால் அரசியலுக்குள் நான் வந்துள்ளேன். என்னுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுடைய விருப்பத்தின் பேரில் அரசியலுக்கு வந்து இன்று நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு என்னுடைய பதவியும் கட்சியையும் வைத்து நல்லது பண்ண வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகின்றேன்.
எங்கள் கூட்டணி கட்சிகளின் கொள்கைகளுக்காக குரல் கொடுப்பது மட்டுமல்ல எங்களுடைய கட்சியின் தனித்தன்மையை நிலை நிறுத்தவும் பல முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். திமுக கூட்டணியில் நாங்கள் இணைந்து தற்போது 8 வருடங்கள் ஆகிவிட்டது. மதவாத அரசியல் என்பது தமிழகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மதவாத அரசியல் செய்யும் பாஜகவை எதிர்க்கிற வல்லமை திமுகவிற்கு இருப்பதால்தான் நாங்கள் மதவாத அரசியலை எதிர்க்கும் திமுக கூட்டணியில் இருக்கின்றோம், இனியும் அவர்கள் கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என்று துரை வைகோ பேசியுள்ளார்.