அயோத்தியில் ராமர் கோயில் அருகே உள்ள ஒரு விடுதியில் குளித்துக்கொண்டிருந்த பெண் பக்தரை வீடியோ படம் பிடித்ததாக கூறப்படும் விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது 25 வயதான சௌரப் திவாரி, பஹ்ராயிச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், ராமர் கோயில் 3ஆம் வாசலுக்கு அருகே உள்ள ராஜா கஸ்ட் ஹவுஸ் விடுதியில் வேலை பார்த்து வந்தார். வாரணாசியிலிருந்து ராமர் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர் காலை 6 மணியளவில் குளிக்கும்போது, மேற்கூரை வழியாக தன்னை யாரோ படம் பிடிக்கிறார்கள் என்பதை கவனித்துவிட்டு கத்தினார். உடனே பிற பயணிகள் வந்து அந்த நபரை பிடித்து ராம்ஜன்மபூமி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சௌரப்பின் மொபைலை சோதனையிட்டபோது, அதில் பெண்கள் குளிக்கும் வேளையில் ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட பல வீடியோக்கள் இருந்ததை கண்டனர். இதனால் இந்த குற்றச்சாட்டு தனிப்பட்ட சம்பவமாக அல்ல என்றும், பல பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வாரணாசி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது நான்கு உறவினர்களுடன் ராமர் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்தார். அவர்கள் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்த நிலையில், இந்த அவமதிப்பு சம்பவம் நடந்தது.
அதன்பிறகு , அயோத்தி மேம்பாட்டு ஆணையம் (ADA) ராஜா கஸ்ட் ஹவுஸை மூடியுள்ளது. அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இந்த விடுதி சட்டவிரோதமானது என்பதால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ADA செயலாளர் சத்யேந்திர சிங் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். மேலும் இதே விடுதியில் இதற்கு முன்னும் இத்தகைய சம்பவங்கள் நடந்ததா, அந்த வீடியோக்கள் பிற இடங்களில் பகிரப்பட்டதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
