பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசுகளை விற்று ஊழல் செய்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன் இம்ரான் கான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “எனது பாகிஸ்தானியர்களே இந்த காணொளி உங்களை வந்தடையும் போது நான் சிறைக்கு சென்றிருப்பேன். நீங்கள் யாரும் அமைதியாக இருக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். நான் இத்தகைய கடினமான சூழ்நிலையை சந்திப்பது உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் தான். நீங்கள் உங்களின் உரிமைக்காக போராடாமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்தால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை அடிமைகளுக்கு சொந்தமில்லை. அவர்கள் எறும்பு போன்றவர்கள். உயரத்தை எட்ட முடியாது. உங்கள் உரிமைக்காக நீதிக்கான போராட்டம் இது. உங்கள் உரிமையை பெறும் வரை தொடர்ந்து போராடுங்கள்” எனக் கூறியுள்ளார்.