இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் அவ்வபோது இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீன படைக்கும் மோதல் ஏற்படும். இந்நிலையில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரின் நஹல்ட் பியாமின் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தை சுற்றி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதை பார்த்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் தன்னை நெருங்குவதை பார்த்து அந்த மர்ம நபர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் காவல் ஆய்வாளர் சென் அமீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சக காவலர்கள் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மர்ம நபரும் கொல்லப்பட்டார். போலீசாரால் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாலஸ்தீனிய ஆயுத க் குழுவை சேர்ந்த அபு அஹமது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.