இந்தியாவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு தலைமறைவாகி இருந்த ஆன்மிக சாமியார் நித்தியானந்தா, தற்போது தென் அமெரிக்காவின் பொலிவியா நாட்டில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நித்தியானந்தாவின் சீடர்கள், அந்நாட்டில் உள்ள அமேசான் காட்டுப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலத்தை 1,000 ஆண்டுகள் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், அவர்கள் அந்த பகுதியில் “கைலாசா” எனப்படும் தனிநாட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் நிலத்தில் அனுமதியின்றி ஆன்மிக முகாம்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்த முயன்ற இந்தச் செயலைக் கண்டித்த பொலிவியா அரசு, ஒப்பந்தம் செல்லாது என அறிவித்து, நிலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக கருதி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், அங்கு தங்கியிருந்த நித்தியானந்தா சீடர்களில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 12 பேர் சீனாவைச் சேர்ந்தவர்களும், 5 முதல் 7 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களும், மற்றவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இது தொடர்பாக பொலிவியா அரசு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கைலாசா என்ற பெயரில் நிலங்களை ஆக்கிரமித்து, தனி நாடாக பிரகடனம் செய்யும் முயற்சிகள் உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கு விரோதமானது என்றும், அது பொருட்படுத்தப்பட மாட்டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நித்தியானந்தாவின் தலைமறைவு தொடர்ந்தாலும், அவரது இயக்கத்தின் நடவடிக்கைகள் பல நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.