உலகையே அச்சுறுத்தி வரும் எரிசக்தி நெருக்கடியைத் தவிர்க்க ஈரான் – இஸ்ரேல் இடையே இரு வார காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அதிரடித் தாக்குதல்கள் மீண்டும் போர்ப் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய ராணுவம் வெறும் 10 நிமிடங்களில் லெபனானின் பல்வேறு பகுதிகளில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் 254 பேர் உயிரிழந்தனர். 1,165-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த மனிதப் பேரவலத்தைத் தொடர்ந்து லெபனானில் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் பிரதமர் நவாப் சலாம், இந்தத் தாக்குதல்களைத் தடுக்க அனைத்து அரசியல் மற்றும் ராஜதந்திர வழிகளையும் கையாண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படவில்லை. அத்தகைய வாக்குறுதி எதையும் நாங்கள் அளிக்கவில்லை என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் போர் நிறுத்தத்தைச் செயல்படுத்துவதா அல்லது இஸ்ரேல் மூலம் போரைத் தொடர்வதா என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டுமே ஒரே நேரத்தில் சாத்தியமில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்கா தனது முதல் 24 மணி நேரத்திலேயே 10 நிபந்தனைகளில் 3-ஐ மீறிவிட்டதாக ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது காலிபாப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக ஹார்முஸ் நீரிணை முடக்கபட்டுள்ளது. அங்கு  426 எண்ணெய் கப்பல்களும், 53 எரிவாயு கப்பல்களும் உட்பட நூற்றுக்கணக்கான கப்பல்கள் சிக்கியுள்ளன. இதனால் உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.  போர் நிறுத்தத்திற்குப் பிந்தைய முதல் தாக்குதலாக, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.  ஈரானுடனான போருக்கு ஆதரவு அளிக்காத நேட்டோ (NATO) நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது போர் மூலமாகவோ அகற்றப்படும். இந்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை,” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில், “போர் நிறுத்தத்தில் லெபனான் கண்டிப்பாகச் சேர்க்கப்பட வேண்டும். இஸ்ரேலுடனான ஒப்பந்தங்களை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இந்த வார இறுதியில் பாகிஸ்தான் செல்ல உள்ளனர். ஈரான் – அமெரிக்கா இடையிலான இந்தப் போர் நிறுத்தம் ஒரு எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமாகத் தெரியவில்லை என்பதால், எந்த நேரத்திலும் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.