அழகுப் போட்டி வென்ற 28 வயதான சீன பெண் லி சிக்சுவான், ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் (HKU) சேர்க்கை பெற போலி சான்றிதழ்களை பயன்படுத்தியதற்காக 240 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டம் பெற்றதாகக் கூறி லி, 2021-ல் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மொழியியல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது ஆவணங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்ட பிறகு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான விசாரணை அறிக்கையின்படி, லி கொலம்பியாவில் படித்ததாகக் கூறிய ஆவணங்கள் மட்டுமன்றி, ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதாகவும் போலியான சான்றிதழ் தயாரித்திருந்தார். உண்மையில் அவர் பெற்ற மதிப்பெண்கள் சாதாரண தேர்ச்சி மட்டுமே என்பதை பல்கலைக்கழக பதிவுகள் உறுதிப்படுத்தின.

இது தொடர்பாக ஹாங்காங் பல்கலைக்கழகம் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணையை ஆரம்பித்தது. அதன் பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகம், “லி ஒருபோதும் எங்கள் மாணவியாக இல்லை” என மின்னஞ்சல் மூலமாக உறுதிபடுத்தியது.

விசாரணையில், லி தனது விண்ணப்பத்திற்கு உதவ ஒரு முகவருக்கு HK$4.10 லட்சம் (சுமார் 38 லட்சம் யுவான்) பணம் செலுத்தியதாக கூறினார். மேலும், அவர் 2020 ஆம் ஆண்டு வுஹான் கல்லூரியில் பட்டம் பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளார். தண்டனை அளிக்கும்போது, நீதிபதி சியாங் கீ-ஹாங், “லி தனது போலி ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

இது தொடர்ச்சியான நேர்மையற்ற நடத்தை” என விமர்சித்தார். ஆரம்பத்தில் 300 நாள் சிறை விதிக்கப்பட்டிருந்தாலும், மனு ஒப்பந்தத்தின் பேரில் 240 நாட்களாகக் குறைக்கப்பட்டது.