பிரபலமான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் குஜராத்தில் பிரதமர் மோடி பிரபலமாக காரணமாக இருந்தவர். பாஜக ஆட்சிக்கும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதேபோன்று கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து பேசினார். முன்னதாக தேர்தல் பொறுப்பாளர் பதவி ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்ட நிலையில் இவருடைய voice of commons நிறுவனம் தான் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து திமுகவின் வெற்றிக்காக ஆதவ் அர்ஜுனா நிறுவனம் தான் செயல்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் விஜயை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடும் நிலையில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றும் எம் ஜி ஆர் ஆட்சி தமிழ்நாட்டில் மீண்டும் அமையும் என்றும் உறுதிபட கூறி வருகிறார். இந்த நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு ஆலோசகராக செயல்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் கட்சி ரீதியாக செயல்படவில்லை எனவும் நட்பின் அடிப்படையில் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆலோசகராக செயல்படுகிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதனால் தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிக்கான காய்களை நடிகர் விஜய் நகர்த்தி வருவது தெளிவாக தெரிகிறது.