தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். தனது முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதற்குக் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலில் இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் விஜய்க்குத் தேவையான வலிமையும், வெற்றியும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய அரசியலில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவரிடமிருந்து கிடைத்துள்ள இந்த வாழ்த்து, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் முதல் கோலிவுட் வரை வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், அண்டை மாநிலத் தலைவர்களின் இந்த ஆதரவு விஜய்யின் அரசியல் ஆளுமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
