நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நேற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஒன்றரை மணி நேரமாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 53 கேள்விகள் கேட்கப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இந்த விசாரணைக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. பழைய கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்ட நிலையில் தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். சம்பந்தப்பட்ட நடிகை 15 வருடங்களாக தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாக முதலில் நான்தான் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் 3 மாதங்கள் கால அவகாசம் இருக்கும்போது 3 நாட்களில் முடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

என் வீட்டில் சம்மன் ஒட்டியதோடு போலீசாரின் வேலை முடிந்துவிட்டது. அந்த சம்மனை ஒட்ட விடாமல் தடுத்து இருந்தால் அது குற்றம் ஒட்டிய பிறகு அதை கிழித்ததில் என்ன குற்றம் இருக்கிறது. எங்கள் வீட்டில் காவலாளி என்று யாரும் கிடையாது. அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். என் மீதுள்ள அன்பு காரணமாக பாசத்தின் காரணமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வந்தார். அவர்களை இரும்பு கம்பியில் துணியை வைத்து சுற்றி அடித்திருக்கிறார்கள். நானும் என் மனைவியும் மன உறுதி கொண்டவர்களாக இருக்கும்போது என் தம்பி தங்கைகள் வலியுடன் குரல் அனுப்புகிறார்கள். எனக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகும் நிலையில் 15 வருடங்களாக அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துவிட்டது போல் பேசுகிறார்கள். அந்த நடிகை விரும்பி வந்து தான் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். நான் திருமணம் செய்து கொள்வதாக அந்த நடிகைக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை.

அந்த நடிகை 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் அவரிடம் இருந்து 60 லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாகவும் உறுதிப்படுத்தப்படாமல் கூறுவதா.? என்னிடம் சிறந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். இந்த வழக்கை நான் பார்த்துக்கொள்வேன் என்றார். மேலும் முன்னதாக விஜயலட்சுமி யார் என்றே  தெரியாது என்று சீமான் கூறிய நிலையில் அடுத்து அவருக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தது உண்மைதான் என்றார். அதாவது மிகவும் கஷ்டத்தில் இருந்ததால் சில மாதங்கள் 50,000 ரூபாய் பண உதவி கொடுத்ததாக கூறினார். இந்த நிலையில் அந்த நடிகை விரும்பி வந்தே என்னுடன் உறவு வைத்துக் கொண்டார் என்று தற்போது சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.