
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நண்பர்கள் சிலர் புதுமணத் தம்பதிக்கு ‘தனித்துவமான’ பரிசாக ஒரு நீல நிற டிரம்மை வழங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். பொதுவாக திருமணத்தில் பல வகையான பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒரு டிரம்? அது கூட வழக்கமானதல்லாமல், சமீபத்திய ஒரு கொடூரமான கொலை வழக்கை நினைவூட்டும் வகையில் இருந்ததால், விழாவில் இருந்தவர்களும், அந்த வீடியோவைப் பார்த்தவர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
उत्तर प्रदेश के जिला हमीरपुर में शादी के दौरान दोस्तों ने दूल्हा–दुल्हन को “नीला ड्रम” गिफ्ट किया !! pic.twitter.com/QrevkBe34p
— Sachin Gupta (@SachinGuptaUP) April 19, 2025
இந்த நகைச்சுவை பரிசின் பின்னணி மார்ச் மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கை பற்றியது. அதாவது கடந்த மாதம் 19-ம் தேதி, முஸ்கான் என்ற பெண் தனது கணவர் சௌரப்பை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, அவரின் உடலை 15 துண்டுகளாக வெட்டி, ஒரு நீல நிற டிரம்மில் வைத்து, அதன் மேல் சிமெண்ட் ஊற்றி மறைத்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது. போலீசார் அந்த டிரம்மைத் திறந்த போது, மனித உடல் பாகங்கள் காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக முஸ்கானும், சாஹிலும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை விவகாரம் வெளியான பின், “நீல டிரம்” என்ற பெயர் சமூக வலைதளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி, பல மீம்ஸ்களுக்கும் பிரபலமானதாக மாறியது.
இதனை நகைச்சுவையாகப் பயன்படுத்தி, ஹமீர்பூரில் நடந்த திருமண விழாவில் நண்பர்கள் புதிய தம்பதிக்கு நீல டிரம் பரிசளித்தனர். அந்த தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பரிசுப் பெட்டியை திறக்கும் போது அனைவரும் ஆச்சரியப்பட, நண்பர்கள் அதை ஒரு நகைச்சுவையாக எடுத்திருந்ததாக விளக்கம் அளித்தனர். இது ஒரு தைரியமான செயல் என சிலர் பாராட்ட, சிலர் “அதிகமா போயிட்டீங்கப்பா!” என விமர்சனம் செய்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒரு நகைச்சுவை அம்சமாக தற்சமயம் இணைய உலகில் மீம்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் பரவிகிறது.