இந்தியக் கிரிக்கெட் உலகின் நட்சத்திர நாயகன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினர், இந்தியாவில் இருந்து தங்கள் இருப்பிடத்தை லண்டனுக்கு மாற்றிக் கொண்டது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய புகழையும் சொகுசு வாழ்க்கையையும் விட்டுவிட்டு, அவர்கள் ஏன் லண்டனில் குடியேறினார்கள் என்பது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாகவே இருந்தது. இந்த நிலையில், பிரபல நடிகை மாதூரி தீக்சித்தின் கணவரும் பிரபல மருத்துவருமான டாக்டர் ஸ்ரீராம் நெனே, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் இந்த முடிவுக்கான உண்மையான பின்னணியை வெளிப்படையாகப் பேசி அமைதியை உடைத்துள்ளார்.

இந்தியாவில் பிரபலங்களாக இருக்கும் செலிபிரிட்டிகள் எதிர்கொள்ளும் அன்றாடக் சவால்கள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரமின்மை குறித்துப் பேசிய டாக்டர் ஸ்ரீராம் நெனே, தாமும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்தபோது இதேபோன்ற சூழலை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா போன்ற உச்சகட்டப் புகழில் இருக்கும் மனிதர்களால் சாதாரண மனிதர்களைப் போலச் வீதியை விட்டு வெளியே இறங்கி நடக்கவோ, ஒரு உணவகத்திற்குச் சென்று நிம்மதியாகச் சாப்பிடவோ முடியாது.

எங்குச் சென்றாலும் அவர்களைச் சூழும் ரசிகர்களின் கூட்டம், புகைப்படக் கலைஞர்களின் கெடுபிடிகள் மற்றும் ஊடகங்களின் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முற்றிலும் முடக்கப்படுகிறது.

குறிப்பாகத் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாய் ஆகியோருக்கு ஒரு சாதாரண, இயல்பான குழந்தைப் பருவத்தை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் அவர்கள் லண்டனில் குடியேறும் முடிவை எடுத்ததாக அவர் விளக்கியுள்ளார். லண்டன் போன்ற வெளிநாடுகளில் விராட் கோலியைப் பெரும்பாலோருக்குத் தெரிந்திருந்தாலும், அங்கு அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வாழ முடியும்.

ஒரு மனிதனுக்குப் பணத்தையும் புகழையும் விடத் தனது குடும்பத்தோடும் குழந்தைகளோடும் நிம்மதியாக வாழும் தனிப்பட்ட சுதந்திரமே மிக முக்கியமானது என்பதை உணர்ந்துதான் கோலி தம்பதியினர் இந்த புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பதாக டாக்டர் ஸ்ரீராம் நெனே சுட்டிக்காட்டியுள்ளார்.