
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 18-ம் தேதி இரவு நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும் தோளிலும் போட்டு, அதைக் காண்பித்தபடி யாசகம் கேட்டுள்ளனர். பொதுமக்கள் இந்த காட்சியைக் கண்டதும் அலறியடித்து ஓடியதாகவும், சிலர் அதிர்ச்சியில் உறைந்த நிலையிலேயே நின்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஒரு செல்போன் கடை வாசலில் நின்றுகொண்டு பணம் கேட்டு மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்த டீக்கடை அருகிலும், அந்த கும்பல் பாம்புகளுடன் வந்து யாசகம் கேட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், “இப்படி பாம்புகளை கொண்டு யாசகம் கேட்பது சட்ட விரோதமானது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.