சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குயிசோ மாகாணத்தின் வூ நதியில், திடீரென ஏற்பட்ட புயலால் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த இந்த விபத்தில், 84 பேர் நீரில் விழுந்தனர். இதில் 74 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரை இப்போது வரை தேடி வருகின்றனர்.

விபத்து நேரம் சீனாவின் மே தின விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர். யாங்சே நதியின் கிளைநதியான வூ நதியில், சுற்றுலா சவாரிக்கு சென்றபோது, திடீரென சூறை காற்றுடன் மழை பெய்தது. இந்த திடீர் வானிலை மாற்றம் படகுகளை கவிழ்த்தது. சிலர் நீந்தி கரைசேர்ந்த நிலையில், மீதமுள்ள பயணிகளை மீட்க 500-க்கு மேற்பட்ட மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவத்திற்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், காணாமல் போனவரை கண்டுபிடிக்க அனைத்துவிதமான முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும், காயமடைந்தோருக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம், சீனாவில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.