
குஜராத் சூரத் நகரில் மயூர் தர்பாரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தக்காரரின் நிறுவனத்தில் கணக்கு பிரிவில் கணினி ஆப்ரேட்டராக வேலை பார்க்கிறார். கடந்த எட்டாம் தேதி மயூர் தனது நண்பரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மயக்கம் ஏற்பட்டு அம்ரோலியில் இருக்கும் ரிங் ரோடு பகுதியில் கீழே விழுந்து சுயநினைவை இழந்ததாகவும், 10 நிமிடங்கள் கழித்து எழுந்து பார்த்தபோது தனது இடது கை நான்கு விரல்கள் வெட்டப்பட்டு இருந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மயூர் அவராகவே விரல்களை வெட்டி கொள்ளும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
அவர் ஒரு கடையில் கூர்மையான கத்தியை வாங்கியுள்ளார். பின்னர் ரிங் ரோட்டுக்கு சென்று மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு இரவு 10 மணிக்கு கத்தியால் தனது நான்கு விரல்களை வெட்டினார். பின்னர் ரத்த ஓட்டத்தை தடுப்பதற்காக முழங்கையின் அருகே கயிற்றை கட்டியுள்ளார். இதனையடுத்து கத்தியையும், விரல்களையும் ஒரு பையில் வைத்து தூக்கி எறிந்துள்ளார். அதன் பிறகு நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உறவினரின் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் இல்லை. அதை தனது உறவினரிடம் அதை கூறுவதற்கு தைரியம் இல்லை. இதனால் மயூர் தனது விரல்களை வெட்டி கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.