உத்திரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ரேபிஸ் பாதிக்கப்பட்ட பசுவின் பாலை குடித்து ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுவை தெரு நாய் ஒன்று கடித்தது.. ஆனால் நாய் கடித்த பிறகு பசுவிற்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. சமீபத்தில் அந்த பசு கன்றினை ஈன்ற  நிலையில், பசுவை வளர்த்த இளம்பெண் தனது குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் பாலை கொடுத்துள்ளார். இந்நிலையில் பாலை குடித்த பிறகு ரேபிஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால் கிராம மக்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

ஆனால் இளம்பெண் அலட்சியமாக இருந்துள்ளார். சில நாட்கள் கழித்து தண்ணீருக்கு பயம், ஒளியை கண்டால் எரிச்சல், சீற்றம் போன்ற ரேபிஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த வேறு யாராவது ரேபிஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.