அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியைத் தங்கள் கட்சியில் இணைக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1984-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சியில் காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.பழனிசாமி, 2018-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி, தற்போதுள்ள திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்றும் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறார். இந்தச் செல்வாக்கு, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்குப் பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது.
அதன் காரணமாகவே, அவரைக் கட்சியில் இணைக்கத் தவெக தரப்பு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் அதிருப்தியாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்து, அரசியல் களத்தில் காலூன்ற விஜய் கட்சி எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
