அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல் குறித்து, முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்திடம் (ஓபிஎஸ்) இன்று (நவ. 25) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “இந்தக் கேள்வியை நீங்கள் செங்கோட்டையனிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறி, பதிலைத் தவிர்த்தார்.

அதிமுகவின் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைக்க ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது ஆதரவாளரான வைத்திலிங்கமும் சமீபத்தில் ‘தொண்டர்கள் உரிமைக் கழகம்’ விரைவில் தனிப்பெரும் கட்சியாக மாறும் என்று கெடு விதித்திருந்தார்.

இந்தக் கெடுவுக்கு மத்தியில், செங்கோட்டையன் தவெகவில் இணையும் முடிவு, ஓபிஎஸ்ஸுக்குச் சற்று அதிப்தியை அளித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஓபிஎஸ்ஸின் அடுத்த அரசியல் நகர்வு குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.